லிபிய முன்னாள் தலைவர் கேணல் கடாபியின் மகனான சாதி கடாபியும் ஏனைய சிறைக்கைதிகளும் சிறைச்சாலையில் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்படுவதை வெளிப்படுத்தும் வீடியோ காட்சியொன்று தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அந்த வீடியோ காட்சி சிறைக் காவலர்கள் சாதி கடாபியின் பாதங்களில் அடிக்க அவர் வலி தாங்காது கூச்சலிடும் காட்சியை உள்ளடக்கியுள்ளது.
இந்நிலையில் மேற்படி வீடியோ காட்சியில் தோன்றும் காவலர்களை இனங்கண்டு அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக லிபிய திரிபோலி நகரிலுள்ள பொது விசாரணையாளர் கூறுகிறார்.
கிளியர்நியூஸ் இணையத்தளத்தில் வெளியாகியுள்ள இந்த வீடியோ காட்சி தொடர்பில் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இத்தகைய சித்திரவதைகளை எந்த சூழ்நிலையிலும் நியாயப்படுத்த முடியாது என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் மத்திய கிழக்கிற்கான பணிப்பாளர் ஜோ ஸ்ரோர்க் கூறினார்.
கேணல் கடாபியின் பிறிதொரு மகனான சாயிப் அல் இஸ்லாமிற்கு 2011 ஆம் ஆண்டுகால மக்கள் எழுச்சியின் போது இடம்பெற்ற குற்றச்செயல்களுக்காக கடந்த வாரம் மரணதண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.
சாயிப் அல் இஸ்லாம் முன்னாள் கிளர்ச்சிக் குழுவொன்றால் ஸின்தான் நகரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அந்தக் கிளர்ச்சிக் குழுவானது அவரை அரசாங்கத்திடம் கையளிக்க மறுத்து வருகின்ற நிலையிலேயே இந்தத் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment