Saturday, July 25, 2015

இன ஐக்கியத்தை எங்கு போய் தேடுவது?

 னிலீர்வழியும் வெளிப்படைத் தன்மையும் கொண்ட அரசியலைப் பார்க்கிலும் கோமாளித்தனம் மிக்க அரசியல்தான் மக்கள் மத்தியில் ஜனரஞ்சகம் நிறைந்ததாக விளங்குவதுண்டு. பாமர மக்களைக் கவர்ந்திழுப்பதில் அரசியல்வாதிகள் சிலர் கோமாளித்தனமான அரசியலையே நடத்தி வருகிறார்கள்.
இந்திய அரசியல்வாதிகளில் ஜனதா கட்சித் தவைரான சுப்பிரமணிய சுவாமியை இதற்கான சிறந்ததொரு உதாரணமாகக் கூற முடியும். அவர் சட்டத்துறையில் அதிகம் கற்றவர். பிரபல அரசியல்வாதிகளுடன் நெருக்கம் கொண்டவர். சுருக்கமாகக் கூறுவதானால் அவர் உலகறிந்த ஒரு பிரபல்ய மனிதர்.
எனினும் சுப்பிரமணிய சுவாமியை ஒரு அரசியல்வாதியாகவோ அன்றி சட்டமேதையாகவோ மக்கள் இன்று வரை ஏற்றுக்கொண்டதில்லை. காலத்துக்கு ஒவ்வாத அவரது அரசியல் கருத்துகளையும் நடத்தைகளையும் மக்கள் வெறும் வேடிக்கையாகவே எடுத்துக் கொள்கின்றனர். வீம்பும் விதண்டாவாதமும் கொண்ட அவரது செயற்பாடுகள் மக்களுக்கு சுவாரஸ்யம் அளிக்கிறதே தவிர பயன் தருவதில்லை.
இலங்கை அரசியல் அரங்கிலும் காலத்துக்குக் காலம் இவ்வாறான வேடிக்கை மனிதர்கள் களேபரம் நிகழ்த்தி விட்டு காணாமல் போய் விடுகிறார்கள்.
பாமர மக்களுக்கு அவர்கள் கதாநாயகர் களாகவும் கற்றறிந்தோருக்கு வெற்றுப் பாத்திரமாகவும் இருந்து விட்டுப் போகிறார்கள்.
எமது நாட்டின் தேசிய அரசியலில் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச எப்போதுமே ஜனரஞ்சகம் மிக்கவர். இடதுசாரிக் கொள்கையை ஆதாரமாகக் கொண்டு தோற்றம் பெற்ற ஜே. வி. பியின் சிரேஷ்ட உறுப்பின ராகவிருந்த அவர், உட்கட்சிப் பூசலையடுத்து மஹிந்த ராஜபக்ஷவினால் உள்வாங்கப் பட்டவர். இடதுசாரிக் கொள்கையையும் முற்றாக கழற்றி வைத்து விட்டுத்தான் மஹிந்த அரசுடன் ஒட்டிக் கொண்டார் வீரவன்ச.
மஹிந்தவின் அரசியல் கொள்கைகளு க்கும் வேஷங்களுக்கும் மிகவும் பொருத்தமானவராக வீரவன்ச விளங்கினார். மஹிந்தவின் எண்ணங்களை பெரும்பான் மையின மக்கள் மத்தியில் கொண்டு செல்வதில் வீரவன்ச ஆற்றிய பங்களிப்புகளைக் குறைத்து மதிப்பிட முடியாது. சிங்கள மக்கள் மத்தியில் ஒருவித மருட்சியை ஏற்படுத்துபவர் அவர். இனவாத உணர்ச்சியூட்டும் கருத்துகளை பகிரங்கமாக வெளிப்படுத்துவதில் விமலுக்கு நிகராக வேறெவரையும் குறிப்பிட முடியாது.
இன்றைய அரசியல் சூழ்நிலையில் சிங்கள மக்கள் இன ஐக்கியத்தைப் பற்றிச் சிந்திப்பதற்கு விமல் வீரவன்ச போன்றோரின் கருத்துக்கள் தடையாக உள்ளதாகக் கூறுவதில் தவறு கிடையாது.
எனினும் அவரது கருத்துகள் சிங்கள மக்களில் ஒரு தரப்பினருக்கு மாத்திரமே உணர்ச்சியூட்டுகின்றன; சுவாரஸ்யம் அளிக்கின்றன. சிந்திக்கக் கூடிய மக்கள் சலிப்புடனேயே அவரது கருத்துகளை நோக்குகின்றனர். அக்கருத்துகளில் அடிப்படை ஆதாரங்கள் கிடையா தென்பதைப் பற்றியெல்லாம் விமல் பொருட்படுத்தியதில்லை.
விமல் வீரவன்ஸ நேற்று முன்தினம் புதியதொரு புரளியைக் கிளப்பியிருக்கிறார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வைக் கொலை செய்வதற்கு முயற்சிகள் இடம்பெறுவதாகவும், அமைச்சர் சம்பிக்க ரணவக்கவுக்கு அதனுடன் தொடர்பு உள்ளதாகவும் விமல் கூறியிருக்கிறார். மஹிந்த மீது பொய்க் குற்றச்சாட்டுகளை அரசு தரப்பினர் சுமத்தி வருவதாகவும். அதனால் பலன் ஏற்படாததாலேயே அவரைக் கொலை செய்வதற்கு முயற்சி மேற்கொள்ளப்படுவதாகவும் கூறுகிறார் வீரவன்ச.
இக்கூற்று பெரும்பான்மை மக்கள் மத்தியில் கூட பரபரப்பை ஏற்படுத்தியிரு ப்பதாகத் தெரியவில்லை. சமீப காலமாக அவர் வெளியிட்டு வரும் விறுவிறுப்பான தகவல்களில் ஒன்றாகவே இதனையும் நோக்க வேண்டியிருக்கிறது. விமல் வீரவன்ச சமீப காலமாக சிங்கள மக்களுக்குக் காண்பித்து வருகின்ற புலிப் பூச்சாண்டிகளுடன் ஒப்பிடுகையில் இப்போதைய செய்தி சிங்கள மக்களுக்கு புதுமையானதாகத் தென்படவில்லை.
இலங்கை தொடர்பாக அன்றைய காலத்தில் ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிவிப்பை கண்டித்து சாகும்வரை உண்ணாவிரதமிருந்து காண்பித்த நாடகம் போலவே விமல் வீரவன்சவின் இன்றைய அரசியல் கோலங்களும் அமைந்திருக்கின்றன.
மிரிஹானவில் வைத்து போலி இலக்கத் தகடு கொண்ட வெள்ளை வான் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதையடுத்தே மஹிந்த மீதான கொலை முயற்சி இடம்பெறுவதாக விமல் கூறியிருக்கிறார். மேற்படி வாகனம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சு தெளிவான விளக்கத்தை அளித்துள்ளது. வீரவன்சவின் குற்றச் சாட்டுக்கான போதிய விளக்கத்தை உள்ளடக்கியதாக பாதுகாப்பு அமைச்சின் அறிக்கை அமைந்துள்ளதனால் இவ்விவகாரம் இதனுடன் முற்றுப்பெற்று விடுமென்பது நிட்சயம்.
வீரவன்ச உட்பட மஹிந்த தரப்பினரின் இன்றைய பிரசாரங்கள் தென்னிலங்கை மக்களை வேறு திசைக்கு இட்டுச் செல்லக்கூடுமென்ற அச்சம் ஜனநாயக விரும்பிகள் மத்தியில் உண்டு. அதேசமயம் சிறுபான்மை மக்கள் கொண்டுள்ள கவலையையும் இங்கே குறிப்பிடாமல் விடுவது பொருத்த மாகாது. குழப்பமும் இனவாதமும் நிறைந்த அரசியலையே கொள்கைகளாகக் கொண்ட அரசியல் பிரபல்யங்களுக்கு மத்தியில் நாட்டின் இன ஐக்கியத்தைப் பற்றி எவ்வாறு நாம் கனவு காண்பது? இன ஐக்கியமென்பது எக்காலத்திலுமே எமக்கு எட்டாக் கனிதானா? சிறுபான்மை மக்கள் மாத்திரமன்றி நாட்டின் எதிர்காலத்துக்காகச் சிந்திக்கின்ற சிங்கள மக்களுக்கும் இக்கவலை உண்டு.

No comments:

Post a Comment