நிச்சயம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைத் தவிர வேறு எந்த அணிக்கும் "மேட்ச்" ஆக மாட்டார் டோணி. டோணி இல்லாத சென்னை சூப்பர் கிங்ஸை நினைத்துப் பார்க்கவும் முடியாது.
அதேபோல சென்னை அல்லாத வேறு அணியில் டோணியையும் பொருத்திப் பார்க்க முடியாது. இரண்டு பேருக்கும் இடையே அப்படி ஒரு பொருத்தம். எப்படி ஹெலிகாப்டடர் ஷாட் என்றால் டோணி நினைவுக்கு வருகிறாரோ அதேபோலத்தான் சென்னையும் டோணியும் பிரிக்க முடியாத இரு அம்சங்கள். இருவருக்கும் இடையிலான உறவு அவ்வளவு விசேஷமானது. மஞ்சள் சட்டை போட்டா டோணி, டோணி மஞ்சள் சட்டை போட்டா சென்னை சூப்பர் கிங்ஸ். ஒரு காலத்தில் மஞ்சள் சட்டை என்றால் ஆஸ்திரேலியாதான் நினைவுக்கு வரும். ஆனால் அதை அப்படியே மாற்றிப் போட்டது சென்னை சூப்பர் கிங்ஸும், டோணி தலைமையிலான படை வென்று குவித்த வெற்றிகளும்தான்.
வேறு எந்த ஐபிஎல் அணிக்கும் இப்படி ஒரு கேப்டன், வீரர்கள் குழு கிடைக்கவில்லை. டோணி மட்டுமே ஒரு ஐபிஎல் அணியின் தொடக்கத்திலிருந்து தொடர்ந்து கேப்டனாக இருந்து வரும் பெருமை படைத்தவர். கிட்டத்தட்ட 8 வருடமாக அவர் சென்னை அணியின் கேப்டனாக இருந்து வருகிறார். இதுவே ஒரு சாதனைதான்.இப்படிப்பட்ட சென்னையின் சூப்பர் ராஜாவை, மும்பை இந்தியன்ஸ் அணியிலோ அல்லது டெல்லி டேர்டெவில்ஸ் அணியிலோ அல்லது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலோ நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை ரசிகர்களால். ஏன் டோணிக்கே கூட அது வித்தியாசமாகத்தான் இருக்கும்.
ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த டோணி, இந்திய கேப்டனாக உயர்ந்து சாதனைகள் படைத்திருந்தாலும் தற்போது அவர் முழுக்க முழுக்க சென்னைப் பையனாகி விட்டார். சென்னையை விட்டு டோணி பிரிவது என்பது நிச்சயம் வாய்ப்பே இல்லாததாகும் என்று கூறும் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகி, ராஞ்சிக்கு அடுத்து டோணியின் 2வது இல்லம் சென்னை.. டோணி தனது வீட்டை விட்டு வெளியேற மாட்டார் என்றும் நம்பிக்கையோடு கூறுகிறார். பார்க்கலாம்.. என்ன நடக்கிறது என்று.
No comments:
Post a Comment